இரு தடவைகள் பிற்போடப்பட்ட பரீட்சையை மீண்டும் பிற்போடாமல் நடாத்துவதற்கான தீர்மானத்தை வரவேற்பதோடு பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது, மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் திட்டமிடல் செய்ய வேண்டும் என்றும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொண்டார்.
இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தீர்மானம் மேற்கொள்ளும் போது, தொடர்புடைய தொழில் சங்கங்களையும் கலந்துரையாட வேண்டும் என வலியுறுத்தியதோடு, கலைத்திட்ட தயாரிப்பிலும் இவ்வாறே தொழில் சங்கங்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வேண்டிக் கொண்டார்.