நாட்டின் புதிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைமை குறித்த உடனுக்குடனான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக குறுந்தகவல் (SMS) சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இச்சேவை இன்று (13) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொடவினால் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
இந்த சேவை அமைச்சின் நீண்டகால தேவையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, சாதாரண பொதுமக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வதந்திகள் மற்றும் தகவல்கள் பரவுவதைத் தடுக்க இது உதவும். கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளம் புதிய தோற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சானது, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, டயலொக், மொபிடெல், எயார்டெல், ஹட்ச், லங்காபெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பின் அடிப்படையில் குறித்த SMS சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த SMS சேவை பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு பிரதானியின் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய புலனாய்வு தலைவர், இராணுவ தொடர்பு அதிகாரி, இராணுவ ஊடக செய்தித் தொடர்பாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மைய பணிப்பாளர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களின் தலைவர்கள், முப்படை மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர்.