எமது கற்பனையில் உதயமாகும் சிலவற்றையே எம்மால் முயற்சிக்க முடிகிறது. முயற்சிகளில் சிலவற்றையே எம்மால் வெற்றிகொள்ள முடிகிறது. ஆனால் நாம் வெற்றி கொண்ட அனைத்துமே முயற்சிகளின் முடிவு தான். நடைமுறை வாழ்க்கையில் பல ஆமைகள் வென்றிருக்கின்றன. பல முயல்கள் வென்றிருக்கின்றன. ஆனால் முயலாமை { முயற்சி இல்லாமை} வென்றதாக வரலாறு இல்லை.
நாம் விழும் ஒவ்வொரு தடவையும் வெற்றிகரமாக எழுந்துவர நாமாக முயற்சி எடுப்போம்.நாம் தூக்கிவிட்ட ஒருவர் எம்மையும் தூக்கிவிட வருவார் என்ற எதிர்பார்ப்பு அர்த்தமற்றது. நடைமுறைச் சாத்தியமும் அற்றது. எமக்கு கை கொடுக்க இன்னொருவர் வரக்கூடும். அவருக்கு நாம் ஒரு மாறும் செய்யமுடியாமலும்போகக் கூடும். உதவிகளும் ஊக்குவிப்புக்களும் பிரதிபலன்களை எதிர்பார்த்து செய்யப்படுபவை அல்ல. அவற்றைச் செய்ய வேண்டியது ஒரு மானிடக் கடமை.
குடும்ப சமூக அமைதிக்கான நெறிப்படுதல்களுக்கான முயற்சிகளும் ஒரு நுட்பமான தொடர் போராட்டமே. எமது கைதவறி பொருட்கள் விழுந்து உடைந்து விடும் பொழுது மனவேதனை கொள்கிறோம். ஆனால் எமது “நாதவறி” வார்த்தைகள் தவறி உறவுகள் குடும்பங்கள் உடைந்து விடும் பொழுது அதன் தாக்கத்தை உணர மறந்துவிடுகிறோம். “நா” காக்க முயற்சிப்பதும் ஒரு பெரு முயற்சியே.
சில உண்மைகள் உணரப் பட உணர்த்தப்பட காலதாமதம் ஆகலாம். உண்மை நிலை உணரப்படும் வரை உணர்த்தப்படும்வரை அது “பொய்” போலத்தோன்றுவது ஒன்றும் புதிர் அல்ல, புதிதல்ல. அதனை உணர்த்த எடுக்கும் முயற்சிகள் சிலசமயம் இலகு வானதாக இருக்காது. இருந்தும் அதற்காக முயற்சிக்காமல் இருக்க முடியாது. எமது முயற்சியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உறுதுணையாக இருக்கும். நாம் வெற்றிபெறுவோம் என்று எம்மை நாம் நம்பாதபொழுது பிறர் எம்மை நம்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
எமது முயற்சிகளின் பொழுது பல சவால்கள் முளைவிடும். இது சர்வநிச்சயமானது. அந்த சவால்கள் தான் எம்மை சரியான பாதையில் நெறிப்படுத்தும் வழி வாய்க்கால்களாக அமையும். எனவே சவால்களை எதிர்கொள்ள முயலாமல் இருந்துவிட முடியாது.
பிறரின் உண்மையான முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போமாயின் எமது முயற்சிகளின் வெற்றிக்காகவும் பல கரங்கள் ஒன்றிணையும் முயற்சிகள் திருவினையாக்கும்.
நாம் முயலாக இருக்கலாம். ஏன் ஆமையாகக் கூட இருக்கலாம். ஆனால் முயலாமை என்ற பொறிக்குள் அகப்படாமல் இருந்து கொள்ள வேண்டும். ஆரோக்கிய வாழ்வு என்ற இலக்கை அடையவும் முயற்சி எடுப்போம். வெல்வோம் என்று நம்புவோம்.
Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்
பொது வைத்திய நிபுணர்
tamilhealth-