வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை மீளப் பெறுவதற்கு அழுத்தம் தெரிவிப்பதாகவும் அவ்வாறு மீளப் பெறாவிட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வகுப்பறையில் மாணர்களின் எண்ணிக்கையை 35 ஆகப் பேண வேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அதனைப் புறக்கணித்து கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள இத்தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தி 2021 ஆகும் போது மாணவர் எண்ணிக்கையை 335 ஆக மட்டுப்படுத்துவதற்கான சுற்றுநிருபத்தை அப்போதைய கல்வி அமைச்சு வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கேற்ப 2016 ஆம் ஆண்டில் 40 மாணவர்களாகவும் 2017 இல் 39 மாணவர்களாகவும் 2018 ஆம் ஆண்டில் 38 மாணவர்களாகவும் 2019 இல் 37 மாணவர்களாகவும் 2020 இல் 36 மாணவர்களாகவும் 2021 இல் 35 மாணவர்களாகவும் மாணவர் எண்ணிக்கையை குறைக்குமாறு சுற்று நிருபம் வெளியிடப்பட்டது.
எனினும் மீண்டும் வகுப்பில் மாணவர் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிப்பதற்கு மேற்கொண்டுள்ள இந்த தீர்மானம் உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு முரணாக அமைகின்றது எனவும் அதற்கு எதிராக நிச்சயமாக உயர் நீதி மன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டு தரம் 1 வகுப்புக்கான மாணவர் உள்ளீர்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகள் முடிவடைந்து இறுதிப்பட்டியல் 36 மாணவர்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மேற்கொண்டுள்ள இத்தீர்மானம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.