கம்பஹா மாவட்ட வத்தளை தமிழ் பாடசாலை ஜூலை 12ம் திகதி வெள்ளிக்கிழமை காலை வத்தளை ஹனுபிட்டியவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில்
இது தொடர்பான அமைச்சரவை பத்திரங்களை கடந்த வருடமும், இவ்வருடமும் இரண்டு முறை அமைச்சரவையில் சமரப்பித்து அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி என்ற பெயரில் முதலாம் வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புகள் வரை கொண்ட தேசிய பாடசாலையாக நடாத்தப்படும் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளேன் என தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கம்பாஹா மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த இந்த தமிழ் பாடசாலை தேவையை நிறைவேற்றி வைக்கும் முகமாக நன்கொடையாளர்கள் மாணிக்கவாசகம் குடும்பத்தினர் இந்த காணியையும், அங்கே அமைந்துள்ள கட்டிடத்தையும் அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். அங்கே தமது மறைந்த மைந்தனின் பெயரில் தமிழ் இந்து பாடசாலையாக இது அமைய வேண்டும் என்பதுவே திரு. மாணிக்கவாசகம் அவர்களது கனவு கோரிக்கையாகும். அந்த அடிப்படையிலேயே எனது அமைச்சரவை பத்திரங்கள் அமைந்தன.
புதிய நான்கு மாடி கட்டிடத்துக்கான ரூபா. 78 மில்லியன் மதிப்பீட்டில் முதற்கட்டமாக எனது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சிலிருந்து ரூபா. 27 மில்லியன் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. இவற்றின் மூலம் வத்தளை வாழ் தமிழ் மக்களின் மிக நீண்டகால எதிர்பார்ப்பு கனவும் நனவாகின்றது என்றும் தெரிவித்தார்.
அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி, முதலாம் வகுப்பிலிருந்து செயற்படும் ஒரு தேசிய பாடசாலையாகும். வத்தளை ஒளியமுல்லை பிரதேசத்தில் மிக நீண்ட காலத்திற்கு முன் ஒதுக்கப்பட்டு பலரால் அடிக்கல் நாட்டப்பட்டும் கட்டப்படாத பாடசாலை காணியாகும். ஒரு மாகாணசபை பாடசாலை அமைக்கப்பட வேண்டிய காணியாகும்.
இந்த அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி பாடசாலை அந்த மாகாணசபை பாடசாலைக்கு மாற்று கிடையாது. ஆகவே ஒளியமுல்லை பிரதேசத்தில் மாகாணசபை பாடசாலை தமிழ் பாடசாலையாக கட்டப்பட வேண்டும். அதை எவரும் கைவிட முடியாது. இதை வத்தளை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்வார்கள் என விரும்புகிறேன் என்று அமைச்சர் மேலும் கூறினார்.