2020 ஆண்டுக்கான பாடநூல் வினியோகம் 16 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்குத் தேவையான பாடநூல் வினியோகம் தொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சரின் தலைமையில் ஹோமாகம பிடிபானயில் அமைந்துள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் களஞ்சியசாலைத் தொகுதியில் காலை 10.30 மணிமுதல் இவ்வைபவம் நடைபெறும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
2019 வருடத்தின் இறுதி தவணையின் பாடசாலை விடுமுநை ஆரம்பமாகும் முன்னர் 2020 க்கான பாடநூல்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளை வினியோகிக்குமாறு கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலவச பாடநூல் வினியோகத்திற்கு அரசு 4165 மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது. 448 வகையான நூல்களின் 43 மில்லியன் பிரதிகள் இவ்வாறு வினியோகிக்கப்படவுள்ளன.
1500 மாணவர்களுக்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளுக்கு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நேரடியாக பாடநூல்களை வினியோகம் செய்கின்றது.
பிரதேச கல்விக் காரியாலயங்கள் மற்றும் தெரிவு செய்யும் பாடசாலைகளில் அமைக்கப்படும் வினியோக நிலையங்கள் 1175 ஊடாக பாடசாலைகள் அனைத்திற்குமான வினியோக நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.