இது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்
4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு இன்று (18) நியமனம் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பல்கலைக்கழகங்களில் வெளிவாரியாக பட்டம்பெற்ற 4,178 பட்டதாரிகளுக்கு, பயிலுனர் அலுவலர்களாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சரான, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.
இன்று (18) அலறி மாளிகையில் இடம்பெற்ற இவ்வைபத்தில் இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய முதலீடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது தெரிவித்தார்.
20,000 பட்டதாரிகளுக்கு அரச பயிலுனர் நியமனங்கள் வழங்குவது தொடர்பில் 2018 முன்வைத்த பிரதமரின் முன்மொழிவுக்கமைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அதன் முதல் கட்டமாக 2018 ஆம் ஓகஸ்ட் மாதம் 3,200 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
அதன் இரண்டாம் கட்டமாக 2019 இல் 12,133 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நியமனங்களில் உள்வாரி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில், 887 வெளி பட்டதாரிகள் மாத்திரமே நியமனம் பெற்றனர்.
இன்றைய நிகழ்வில் மேலும் 4,178 வெளி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இது வரை 19,511 பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.