அரச ஊழியர்களை தொழிலுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சே மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அல்ல என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியன்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
திவைன சிங்கள நாளேடுக்கு அவர் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கான தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் தொடர்பாக தீர்மானம் எடுகப்பதற்கு முழுமையான அதிகாரம் பொது நிர்வாக அமைச்சுக்கே காணப்படுவதால், தாபனவிதிக் கோவை மற்றும் சுற்றுநிருபங்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள விரும்பும் அரச ஊழியர்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளமையின் அடிப்படையில் செயற்பட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்வதற்கான வழிமுறை ஒன்று காணப்படுவதாகவும் அதனை மீறி புதிய முறையை செயற்படுத்த வேண்டுமாயின், தமது அமைச்சோடு கலந்துரையாடி, அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான முறைமை ஒன்றை உருவாக்கி அமுல்படுத்தும் வரை இந்த இணையத்தளத்தில் தம்மை பதிவு செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.