நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, ஆசிரியர்கள் மூன்று நாட்கள் மட்டுமே பணிக்கு வரும் வகையில் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இத்திட்டத்தின்படி, ஆசிரியர்கள் மூன்று நாட்கள் மாத்திரம் பாடசாலைக்கு வருகை தரும் அதே வேளை மாணவர்கள் 5 நாட்களும் பாடசாலை வருவர். பாடசாலை நாட்கள் குறைக்கப்பட மாட்டாது.
பாடசாலையின் பாடங்களுக்கான நேரசூசி மாற்றியமைக்கப்படுவதோடு தேவையாயின் பாடசாலை நேரமும் அதிகரிக்கப்படும். இதன் மூலம் ஓரளவு ஆசிரியர்களின் பயணச் செலவு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இது தொடர்பாக கல்வி அமைச்சு தயாரித்துள்ள திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கை தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம் ஒவ்வொரு புதன் கிழமையையும் விடுமுறை தினமாக அறிவிக்குமாறு பிரேரித்துள்ளதோடு, வேறு சில தரப்புக்கள் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குமாறும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.