2023ஆம் ஆண்டுக்குள் பாடசாலைக் கல்வித் துறையின் அடிப்படைத் தேவைகளை பற்றாக்குறையின்றி பூர்த்தி செய்ய அனைத்து திட்டங்களும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் மற்றும் பிற பொருட்கள் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்றன. அடுத்த ஆண்டு சீருடை வழங்குவதற்கு உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் சீன அரசுடன் சசல் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீடு, பாடசாலைகளை நடத்துதல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என்ற தொனிப்பொருளில் இன்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.
“கல்வி அமைச்சர் என்ற வகையில் நாட்டில் பாடசாலை நாட்களின் எண்ணிக்கையையோ அல்லது காலங்களையோ குறைக்க முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை. கிராமப்புறங்களில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3000 பாடசாலைகள் உள்ளன.
பாடசாலைகள் மூடப்படுவதால் இந்த சிறிய பாடசாலைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன மற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் அந்தப் பாடசாலைகளை நடாத்த விரும்புகிறார்கள். அந்த முடிவை எடுத்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்,
மேலும், கற்பித்தல் சாத்தியமில்லாத பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை, முடிந்தால், ஒன்லைனில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், ”என்று அமைச்சர் கூறினார்.
“இந்த ஆண்டுக்கான க.பொ.த (உ/த) மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒக்டோபர் மற்றும் நவம்பரில் நடத்த தீர்மானித்துள்ளோம். 2022 க.பொ.த (சா/த) பரீட்சை பெப்ரவரி 2023 இல் நடைபெறும். பாடசாலை மூடல்கள் பாடத்திட்டத்தை முடிப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தும். இப்பிரச்சினைக்கு தீர்வாக , பாடசாலைகளில் இணை பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக நேரத்தை ஒதுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் விடுமுறை நாட்களைக் குறைத்து, இழந்த நேரத்தை ஈடுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டது, ”என்று அமைச்சர் பிரேமஜயந்த கூறினார்.
இந்த நாட்களில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை க.பொ.த (சா/த) விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் உதவுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் ரணசிங்க அவர்களும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.