– ஏனைய அனைத்து மாகாணங்களிலும் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை திறப்பு
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான அனுமதியை சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கொவிட்19 பரவல் காரணமாக, இதுவரை அதற்கான அனுமதி சுகாதார அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெறாத நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கல்வியமைச்சு அதற்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் இதுவரை திறக்கப்படாத ஏனைய அனைத்து மாகாணங்களிலுமுள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) திறக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது முதற்கட்டமாக தரம் 5, 11மற்றும் 13ஆகிய வகுப்புக்களுக்கே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஏனைய வகுப்புகளைஆரம்பிப்பது தொடர்பில் திட்டமிடப்பட்டிருந்தாலும் அதற்கான இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 1000தேசிய பாடசாலைகளை உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 626தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த நடவடிக்கைகள் அடுத்த மாதம் நிறைவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் 374தேசிய பாடசாலைகள் உள்ளன.
அந்த வகையில் புதிதாக உருவாக்கப்படும் தேசிய பாடசாலைகளுக்கான கட்டடங்கள் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(தினகரன்)