திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோராளவை நேற்று தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த இவர், 2013.09.13 தொடக்கம் தென்மாகாண முதலமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
1991ம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி இவர், 1997ம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து கணக்காளர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டதுடன் பின்னர் 1998ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைப்பரீட்சையில் சித்திபெற்று இச்சேவையினுள் இணைந்து கொண்டார்.
இவர் காலி மாவட்டத்தின் போபே-பொத்தல,அக்மீமன , ஹபராதுவ ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் பின்னர் தென்மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் தென்மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் பதவி வகித்தார். தென்மாகாண முதலமைச்சரின் செயலாளராக பதவி வகிப்பதற்கு முன்னர் தென்மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
காலி ரிச்மன்ட் கல்லூரியின் பழைய மாணவரும் றுஹுனு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமான இவர், தென் மாகாண மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளமை முக்கிய அம்சமாகும்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எனக்கு தமிழ் புரியாது. மக்களது பிரச்சினைகளை மொழிபெயர்ப்பின்றி விளங்கிக்கொள்வதே சாலச்சிறந்தது. குறுகிய காலத்தில் தமிழ் மொழியை விளங்கிக்கொள்ள முயற்சிப்பேன். அத்துடன் திருகோணமலை மாவட்டத்தை தேசிய ரீதியில் ஏனைய மாவட்டங்களைபோல் கொண்டு வர எனது பதவிக்காலத்தில் முயற்சிப்பேன். மக்களுக்கான சேவை பணியில் எத்தகைய தடை வரினும் அதனை முறியடித்து செயற்படுவேன். மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற அவசியமான திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான நிதிமூலங்களைப்பெற்று செயற்படுத்தப்படும் என்றும் இதற்குத் தமக்கு உதவுவதாக அமைச்சின் செயலாளர்கள் தெரிவித்ததையும் இதன்போது அரசாங்க அதிபர் நினைவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ்,கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க,தென் மாகாண ஆளுநரின் செயலாளர் திலேக்கா குடாச்சி, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்), எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், கிளைத்தலைவர்கள், சக உத்தியோகத்தர்கள் , அரசாங்க அதிபரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.