குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறவுள்ளவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது. முதல் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 34,818 பேருக்கு நியமனங்கள் வழங்க நடவக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களின் திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் 25 துறைகளில் 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். தேசிய பயிலுனர் மற்றும் தொழில்பயிற்சி அதிகார சபை இப்பயிற்சிக்கு பொறுப்பாகவிருக்கும்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு NVQ III தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் 22500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
6 மாத வெற்றிகர பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு PL -01 தரத்தின் கீழ் நிரந்தர அரச நியமனம் வழங்கப்படும். அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் அவர்கள் நிலைப்படுத்தப்படுவர்.
அத்தோடு, அரச காணிகளில் பயிரிடல், கைவிடப்பட்ட நிலங்களில் பயிரிடல், வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு, நீர்பாசன கமநல சேவை, விவசாய சேவை நிலையம், கிராமிய வைத்தியசாலை, பாடசாலைகள் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுவர்.
இதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பமானது. மூன்று மொழிகளிலும் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும் விண்ணப்பதாரிகள் நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு அரச அல்லது தனியார் துறையில் வேலையில் ஈடுபடாத குடும்பங்களின் உறுப்பினர்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.