அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் திட்டத்தின் பணிகளை இன்று ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச இயந்திரத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்லும் நோக்கில் ஜனாதிபதி கோத்தாபாயவின் வழிகாட்டலுக்கேற்ப இத்திட்டத்தின் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கோவிட்19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரான கலாநிதி பிரியாத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்தார். யார் அழைக்கப்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரச அலுவலகங்களில் சேவையைப் பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கான விசேட திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆள் அடையாள அட்டையின் இலக்கத்திற்கு ஏற்ப இதனை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தின் இத்தீர்மானம் குறித்து எச்சரித்துள்ளது. அரச அலுவலகங்களில் பணிகளை ஆரம்பித்தல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீள கொண்டுவருதல் என்பவற்றுக்கு முன்னர் செய்து முடிக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை முடிக்க வேண்டும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.