ஜனவரியில் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு
ஜனவரி மாதம் அரச அதிகாரிகளின் அனைத்து சம்பளப் பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள நிலையில் சிலரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே அரச உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
சம்பள முரண்பாடுகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அமைச்சர் ரணுக்கே குழுவின் சிபாரிசுக்கிணங்க அதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும், அதற்காக 118பில்லியன் நிதியை அரசாங்கம் ஒதுக்குமென்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
எம்மைப் போன்று வேறு எந்த அரசாங்கமும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கவில்லை. நாம் 140வீதமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்துள்ளோம். தேர்தல்களை எதிர்கொள்ளும் இக் காலங்களில் சிலர் அரசியல் நோக்கங்களுக்காக போராட்டங்களை மேற்கொள்வதை ஏற்க முடியாது.
இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதுடன் நாட்டின் அபிவிருத்தியும் பாதிக்கப்படுவதை அவர்கள் உணர வேண்டும். நீதித்துறையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. எனினும் சில அரச அதிகாரிகளுக்கு அமைச்சர்களை விட அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்றது என்றார். (தினகரன்)