பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுமென்று அதன் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் திஸாநாயக்க தெரிவித்தார்.
மருத்துவ மற்றும் கால்நடைவள பீடங்களின் முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கும், பொறியியல் பீடத்தின் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், கணனி பொறியியல், விவசாய மற்றும் சுகாதார பீடங்களின் மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகும்.
சப்ரகமுவ மற்றும் ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பமாகும். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகும்.
விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள், விவசாய பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள், சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் 11ம், 12ம், 13ம் தொகுதி மாணவர்கள் ஆகியோருக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் 39வது தொகுதிக்கான முதலாவது மருத்துவ பட்டப்; பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. அனுமதி அட்டைகளை மாணவர்கள் இன்று தொடக்கம் மருத்துவ பீடாதிபதி அலுவலகத்தில்; பெற்றுக் கொள்ள முடியும்.
மருத்துவ பீடத்தின் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களுக்கான விடுதி வசதிகளும் இன்று வழங்கப்படும் என யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடாதிபதி டாக்டர் எஸ். ரவிராஜ் அறிவித்துள்ளார். இதேவேளை பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், கலை, விஞ்ஞானம், விவசாயம், பொறியியல், தொழில்நுட்பம், முiகாமைத்துவம் மற்றும் வணிக பீடங்களும், சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை இன்றைய தினம் விடுதிகளுக்குத் திரும்புமாறும் அவர் அறிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகும் என வளாகத்தின் தலைவர் பேராசிரியர் ரஞ்சன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். (news.lk)