மத்திய மாகாணப் பாடசாலைகளை இரண்டாம் தவணைக்காக ஆரம்பிப்பதை இன்னும் ஓரிரு வாரங்கள் பிற்போடுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய மாகாணப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் மத்திய மாகாண ஆளுனருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர்கள் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.
பாடசாலையின் பாதுகாப்பை இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை. பாடசாலை மாணவர்களிடையே பிரச்சினைகள் வர இடமுண்டு. பாடசாலைச் சூழலை இன்னனும் பரிசோதிக்க வில்லை. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிய நிலையில் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டாம் என்று கோரிய அதிபர்கள் குறைந்த பட்சம் இரு வாரங்கள் வரை தாமதிக்குமாறு ஆளுனரிடம் வேண்டிக் கொண்டனர்.
இக்கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன, தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. எனவே நாளை ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து கலந்துரையாடி பொருத்தமான முடிவொன்றை எடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.