பாடசாலைகளில் பணம் வசூலிப்பது தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 26/2018 சுற்று நிருபத்தை ரத்துச் செய்துள்ள போதிலும் அதற்கான மாற்றுவழியான சிறந்த பிரேரணைகளை முன்வைக்காது தொழில் சங்கங்கள் பொறுப்பற்று நடந்துகொள்வதாக கல்வி அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
26/2018 சுற்று நிருபத்தில் காணப்பட்ட பலவீனமான அம்சங்கள் பெற்றாரிடம் பணம் அறவிடுவதற்கான இடமளித்ததன் காரணமாக கல்வி அமைச்சர் கடந்த 29 ஆம் திகதி ரத்துச் செய்தார்.
இதற்கான மாற்று சுற்று நிருபத்தை மிகவும் கவனமாக தயாரிப்பதற்காக குழுவொன்றையும் நியமித்துள்ளதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சு அதற்கான கலந்துரையாடல்களை கடந்த வாரம் நடாத்தியபோதிலும் தொழில் சங்கங்கள் உருப்படியான ஆலோசனைகளை முன்வைக்க வில்லை என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், தேசிய கல்வி சேவைகள் சங்கம் உட்பட பல தொழில் சங்கங்கள் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தன.
எனினும், இக்கூட்டங்களில் தேவையான ஆலோசனைகளை முன்வைக்காது இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு எதிராக குறித்த ரத்துச் செய்த சுற்றுநிருபத்தை முன்வைத்து அடிப்படையற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.