தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் வழங்கப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். தெரிவு செய்யபட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுடன் கல்வி அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த வருடம் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனம் வழங்குவதில் காணப்பட்ட தொடர்ச்சியான இழுபறி நிலை அண்மையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டது.
இந்த அனுமதி பெறப்பட்டதன் பின் இந்நியமனத்தை விரைவாக வழங்குவதற்கான பணிகளை எமது அமைச்சு முன்னெடுத்து வருகிறது. அதன்படி இந்நியமனத்தை மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல்வாரத்தில் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
எமது அரசால் அறிமுகப்படுத்தபட்ட இந்த நியமனத்தை தடைகளை மீறி வழங்க வேண்டும் என்பதில் கல்வி அமைச்சர் அகில்விராஜ் காரியவசம் உறுதியாக உள்ளார். அவரின் பணிப்பின் பேரில் அமைச்சு அதிகாரிகள் இந்நியமனம் தொடர்பான பணிகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.