நாளை பாடசாலைகளுக்கு வருகை தருவதில் ஆசிரியர்கள் அதிபர்கள், மற்றும் மாணவர்கள் போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்கொள்வதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தூர பிரதேச ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று தமது வதிவிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டியுள்ளது. எனினும் இன்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இப்பிரச்சினைகள் தொடர்பாக தலையிடுமாறு கல்வி அமைச்சுக்கு கடந்த வாரம் நாம் அறிவித்தோம். எனினும் அவர்களால் அவ்வாறான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மாணவர்கள் பகுதிபகுதியாக அழைக்கப்பட்ட முறை சுகாதாரத்துறையினரது வழிகாட்டலா அல்லது கல்வி அமைச்சின் வழிகாட்டலா என்பதை கல்வி அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தீர்மானம் சுகாதார அதிகாரிகள் எடுப்பதே சிறந்தது. எனினும் அவ்வாறான ஒரு வழிகாட்டலைக் காணவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதே நேரம், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் கல்வி அமைச்சுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமொன்று இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.