இயலுமையற்ற மாணவர்களை ஊக்குவிப்பது ஆசிரியர் கடமை
நாட்டின் வருங்கால தலைவர்கள் வகுப்பறைகளில் உருவாகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இன்றைய வகுப்பறைச் சூழல் அத்தகைய நிலையில் இல்லை. புதிய மின்னணு கருவிகள், தொழில்நுட்பம், கலாசாரம் போன்றனவெல்லாம் சேர்ந்து இன்றைய மாணவர்களை வன்முறை மிக்கதாக மாற்றியிருக்கின்றன.இந்நிலை மாறுவதற்கு வகுப்பறை கல்வித் திட்டத்தில் விரும்பத்தக்க மாற்றங்களைத் திறமையாகவும் வினைத்திறனாகவும் ஏற்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டும் என கல்வி உளவியலாளர்கள் கூறுகின்றனர். அவ்வகையில் நீதிபோதனை வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், பாடத் திட்டத்தில் உளவியலை சேர்க்க வேண்டும் எனவும் தற்கால கல்விச் சமுதாயத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.விரும்பத்தக்க மாற்றங்களைத் திறமையாகவும், வினைத்திறனாகவும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை ஆசிரியரின் கைகளில் உள்ளது. மானுட வளர்ச்சி என்பது மனிதன் அறிவு, பண்பாடு,பொருளாதாரம் வாழ்க்கைத்திறன் என்பவற்றில் முன்னேற்றம் அடைவது எனக் கூறலாம். மானுட வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் முதலில் அவன் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். மானுட வளர்ச்சிக்கு கல்வி பெரும் பங்கு வகிப்பதனால் மனிதனுக்கு கட்டாயமாக கல்வி அவசியம் எனலாம்.மாணவரிடையே தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்துதல், தேவையான போது பொருத்தமான பின்னூட்டலை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக கற்றலுக்குப் பொருத்தமான மனவெழுச்சி நிலைகளை மாணவரிடையே உருவாக்கலாம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் விருத்தியடைகின்ற உடன்பாடான உறவு முறையினூடாக பாதுகாப்பான வகுப்பறைச் சூழலை உருவாக்க முடியும்.பாடத்தைக் கற்பிக்கும் முன்னர் அதில் மாணவர் கூடியளவு ஊக்கத்துடன் தொழிலாற்ற என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பது தொடர்பான உத்திமுறைகளை ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும் என கல்வி உளவியல் வலியுறுத்துகின்றது. கல்வி நடவடிக்கைகளின் போது ஊக்குவித்தல் மிக அவசியமாகும். மாணவர்களை ஊக்கப்படுத்தும் போது வினைத்திறனான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இயலாமையில் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது ஆசிரியருடைய கடமையாகும். இதன்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிகாட்ட முன்வருவர்.மேலும், குழுசார்ந்த செயற்பாடுகள் மாணவர்கள் மத்தியில் ஆளுமையை வளர்க்கக் கூடியன. வகுப்பறையில் மாணவர்களை குழுவாகப் பிரித்து செயற்பாடுகளை வழங்குவதன் மூலம் மாணவர்கள் கூட்டுணர்வுடன் செயற்படுவர். இது அவர்கள் எதிர்காலத்தில் எந்தவொரு விடயத்திலும் கூட்டுணர்வுடன் செயற்பட வழிவகுக்கும்.ஒருவன் பெறும் வெற்றிதோல்விகள் அவனது ஊக்கத்தைப் பாதிக்கும். இவையும் அவா நிலையுடன் நெருங்கிய தொடர்புடையன.பரீட்சையில் 100 புள்ளிகளை பெற முயன்ற மாணவன் 95 புள்ளிகளைப் பெற்றாலும் அதனைத் தோல்வியாகவே கருதுவான். ஆனால் 50 புள்ளிகள் பெற முயன்ற மாணவன் 50 புள்ளிகளைப் பெற்றாலே அதனைப் பெறும் வெற்றியாகக் கருதுவான். வெற்றி என்பது ஒரு வெகுமதியானால் தோல்வி என்பது தண்டனையாகும். இவை இரண்டுமே எமது வாழ்க்கையையும் மனஉறுதிகளையும் கட்டுப்படுத்துவன. இரண்டுமே கற்றலுக்கு ஊக்கத்தைக் கொடுப்பன. மாணவர்கள் பாடவேளைகளில் பெறும் வெற்றி தோல்விகள் எவ்வளவுக்கு அவர்களின் ஊக்கத்தைப் பாதிக்கின்றனவென்று ஆசிரியர் அவதானித்து வேண்டிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.மேலும், ஒரு செயலை விருப்புடன் செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி வெகுமதியாகும். தண்டணை வேண்டாத செயலை தவிர்ப்பதற்குப் பயன்படுவதாகும். பாடங்களில் முன்னேற்றத்துக்கு மாத்திரம் அளிக்கும் வெகுமதி இரண்டு அல்லது மூன்று மாணவருக்கே கிடைப்பதால் ஏனையோர் உற்சாகம் இழக்க நேரிடும். ஒழுங்காக பாடசாலைக்கு வருகை தருதல், விளையாட்டில் முன்னேற்றமடைதல், அழகாக எழுதுதல், தூய உடை அணிதல், வீட்டு வேலையை ஒழுங்காகச் செய்தல் போன்ற பல்வேறுபட்ட செயல்களுக்கும் வெகுமதி அளித்தால் வகுப்பில் எல்லோரும் ஏதேனும் ஒன்றில் வெகுமதி பெற வாய்ப்பிருக்கும்.இவற்றை ஆசிரியர்கள் முன்னறிவிப்பார்களானால் மாணவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்வர். அத்தோடு, புகழ்ச்சி,- இகழ்ச்சி நுட்பமுறையையும் கல்வி உளவியல் கையாள்கின்றது. அதாவது மாணவர்கள் வெற்றி பெறும்போது புகழ்ச்சியும், தோல்வி கிடைக்கும் போது இகழ்ச்சியும் பெறுவது இயல்பான விடயமாகும். அவற்றை அளவுக்கு மீறி அளிப்பதால் தீங்கு ஏற்படலாம். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் கூடியளவு சமுதாயத் தாக்கமுடையன. அவற்றை மாணவரின் ஆளுமைக்கு ஏற்றவாறே வழங்க வேண்டும். சிலருக்கு எவ்வளவு புகழ்ச்சியும் பயனளிக்காதிருக்கும். ஆனால் சிலர் சிறிதளவு இகழ்ச்சி கிடைத்தாலும் மனம் முறிவடைவர். ஆனால் வேறுசிலர் தடித்த தோலுடையவர் போன்று இகழ்ச்சிக்கு அஞ்ச மாட்டார்கள்.பரீட்சைப் புள்ளிகள் மாணவருக்கு முக்கியமான புற ஊக்கியாகும். ஆயினும், மாணவர் அறிவுக்காக அன்றிப் புள்ளிகளுக்காகப் படிக்கக் கூடாது. புள்ளிகள் மூலம் மாணவர் தம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தமது முயற்சியின் முன்னேற்றத்தை அறியவும் மேலும் முயற்சி செய்யவும் ஊக்கம் பெறுவர். இவை மாணவர்களிடம் நம்பிக்கையை வளர்ப்பன. தம்மைத்தாமே கட்டுப்படுத்தும் திறனை வளர்ப்பன. எனினும், போட்டிகளை ஏற்பாடு செய்யும் ஆசிரியர் கவனமாக இருத்தல் வேண்டும். தீவிரமான போட்டிகளால் கேலி, மனமுறிவு, ஒழுக்கச் சீர்கேடு ஆகியன ஏற்படக் கூடாது.மேலும்,மதிப்பீட்டு முறை என்பது கல்வியில் இன்றியமையாத கூறாகும். இன்று மதிப்பீடு என்பது ஆண்டு இறுதித் தேர்வாக இன்றி ஆண்டு முழுவதும் தொடர்ந்து காணப்படுகின்றது. பாடப் பொருளறிவில் மாணவர்களது தேர்ச்சி மட்டுமன்றி, அவரது பல்வேறு பிற பண்புகளையும் ஆசிரியர் மதிப்பிட வேண்டும். மதிப்பீட்டு முறைகள் பலவுள்ளன. எனவே, விரும்பத்தக்க மாற்றங்களை திறமையாகவும், வினைத்திறனாகவும் ஏற்படுத்திக் கொள்ள மதிப்பீட்டு திறன்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும்.ச.அனுஷாதேவி
கிழக்கு பல்கலைக்கழகம்
கலை கலாசார பீடம்நன்றி தினகரன்