இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மத்திய, மாகாண கல்வி அமைச்சிடம் வேண்டுகோள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலை என்பது ஒட்டுமொத்த மக்களுக்குமானது. மக்களில் ஓரங்கமாகவே அதிபர், ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இது வெறும் அலுவலக கடமையல்ல. மனித ஜீவன்களோடு பயணிக்கும் கடமை. இந்தக்கடமைகளில் இருந்து அதிபர், ஆசிரியர்கள் விலக முடியாது என்பதனை நாம் உணர்ந்தவர்கள். ஆகையினாலேயே எமது கடமைகளை எவ்வேளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
இன்று முதல் நாட்டில் உள்ள 300 தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்து, அதனை ஏற்ற போக்குவரத்து துறை சார்ந்தவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அவர்களின் சேவை முடக்கத்தால் பாடசாலைகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் அதிபர், ஆசிரியர், மாணவர்களின் போக்குவரத்து வழிமுறைகளும் பாதிப்படைர்துள்ளன. இன்று பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாகவே உள்ளது. நாட்டுநிலைமை பதட்டமாக உள்ளது.
ஆகையால் போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும் வரை. அதிபர், ஆசிரியர்களின் வரவு விடயத்தில் நெகிழ்சிப் போக்கை கடைப்பிடிக்குமாறு மத்திய கல்வி அமைச்சிடமும், மாகாண கல்வி அமைச்சுக்களிடமும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வினயத்துடன் கேட்டுள்ளது.
அதுமட்டுமன்றி 300 தொழிற் சங்கங்களில் நாமும் அங்கம் வகிப்பதால் மக்கள் படும் அவல நிலையை அரசுக்கு வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கும் உண்டென்பதனை அரசாங்கம் உணர்ந்து, பொதுமக்களின் விசேடமாக இந்நாட்டின் இளையோரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் விட்ட தவறுகள் இனியும் நடைபெறக் கூடாது என்பதனை நினைவுறுத்த விரும்புகின்றோம்.
ஆகையால் ஆசிரியர்களை கையொப்ப இயந்திரத்தின் ஊடாக நெருக்கீடு வழங்குவதை விடுத்து, இப்போதைக்கு அவர்கள் வரவுப்பதிவேட்டில் கையொப்பம் இடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.