துணைவேந்தர் மங்களேஸ்வரன் தெரிவிப்பு
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை எமது மூதவையும் பேரவையும் ஏற்றுக்கொண்டுள்ளன. தற்போது அதற்கான திட்டமுன்மொழிவினை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளோம். இதன் மூலம் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையையும் ஒரு போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் எமது திட்ட அறிக்கை அங்கிகரிக்கப்பட்டதுடன் அதன் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படும். குறிப்பாக எதிர்வரும் சில வருடங்களுக்குள் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் சூழலியல் பீடம் ஒன்றினை உருவாக்குவதற்கும் எமது மூதவையும் பேரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. வங்கியியல், காப்புறுதி தொடர்பான புதிய கற்கைநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்கு மானியங்கள் ஆணைக்குழு எமக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த கற்கைநெறிக்கு க.பொ.த உயரதரத்தில் கடந்தவருடத்தில் சிறப்புத்தேர்ச்சிபெற்ற மாணவர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. மானுடவியல் சமூகவியல் என்ற பீடத்தை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவையும் சமர்ப்பித்துள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்ததும் அது விரைவில் ஆரம்பிக்கப்படும்.
பொருளாதார நெருக்கடி நிலமையால் அரசாங்கம் சாதாரண செலவீனங்களை வழங்குவதற்கே உடன்பட்டுள்ளது. நிர்மாண துறைகளிற்கான நிதியினை தராத சூழ்நிலையில் அதனை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நிதி உதவிகளூடாகவும், அரச தனியார் பங்குடமையின் ஊடாகவும் அதனை செய்வதற்கான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.