கல்வி தொடர்பான ஜனாதிபதி செயலணி கலைக்கப்பட்டது

இலங்கையில் கல்வி மேம்பாடு, விரிவாக்கம் மற்றும் நவீன மயப்படுத்தலுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கல்விக்கான ஜனாதிபதி செயலணி உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செயலணியின் செயலாளர் கே. ஆர். பத்மப்பிரியா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்பரைக்கமைவாக ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தின் படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி, விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்திருந்தார்.

ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவாக்கல் நடவடிக்கைகள் மற்றும் கல்வியை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு வழங்குவதும், கல்வி முன்னேற்றம் பற்றி அறிக்கைகளை வழங்குவதும் இந்த செயலணியின் பிரதான செயற்பாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கையின் மூத்த துறைசார் நிபுணர்கள், கல்வியியலாளர்கள், அனைத்துப் பல்கலைக் கழகங்களினது துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் உட்பட 31 பேர் இதன் உறுப்பினர்களாக நியமக்கப்பட்டிருந்தனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து இந்த செயலணி கலைக்கப்பட்டுள்ளதாக 27.07.2022 ஆம் திகதியக் கடிதம் மூலம் தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வி நடவடிக்கைகள் பற்றிய ஜனாதிபதி செயலணியின் செயலாளர் குறப்பிட்டுள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!