நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு வழங்கியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவது கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகளை தாமதமின்றி நடத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி எந்தவொரு தடையும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உப தலைவர் குறிப்பிட்டார்.
இதனிடையே பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மட்டுப்படுத்த பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, மாணவர்கள் விடுதிகளை காலி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பேராதனை பல்கலைக்கழகம் மூடப்படாது, அத்தியாவசிய நடவடிக்கைகள் வழமை போன்று மேற்கொள்ளப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.