ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.
33 விளையாட்டுகளுக்கு டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த இரசிகர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் திகதி முதல் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் தங்கள் நாட்டிலேயே டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
www.ticket.tokyo2020.org என்ற இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பாக விபரங்களை இரசிகர்கள் பார்க்கலாம்.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில், அண்மையில் வெளிவந்த தகவலின்படி, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு, ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது
டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 540 பிரிவுகளில் 22 விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன.
அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்ட விளையாட்டு அரங்குகளின் 60 சதவீதமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கங்கள் பெரும்பாலும் அடுத்த வருடம் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக, முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரங்கத்தின் கூரைகள் மரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியுமென வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.
குறித்த கோடைக்கால ஒலிப்பிக் தொடரில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமையை போட்டி அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர். (Thinakaran)