மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சை மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மதிப்பீட்டு நிலையங்களுக்கு செல்வதற்கான எரிபொருளை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சை மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பரீட்சை மதிப்பீட்டு நிலையத்திற்கு செல்வதற்கான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு இலகுவான பொறிமுறை ஒன்றினை கல்வி அமைச்சும், இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளரும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கு ஆதரவாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (2022.06.19)காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொன்னுத்துரை -உதயரூபன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் க.பொ.த சாதாரண பரீட்சை மதிப்பீட்டு பணியில் ஈடுபட்ட சுமார் 1200 ஆசிரியர்கள் இன்றையதினம் கலந்துகொண்டார்கள்.
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலை, புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி போன்ற பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எரிபொருள் வழங்குவதில் இலகுவான பொறிமுறையை வழங்கவேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார்கள்.
“பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையயை நடமுறைப்படுத்து! ,பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் மனநிலையை குழப்பி கல்வியை சீரழிக்காதே!,பரீட்சை மதிப்பீட்டாளர்களுக்கு உடன் எரிபொருள் வழங்கு! என சுலோக அட்டையை ஏந்தியவாறு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் கல்லூரியிலிருந்து ஆரம்பித்து கோட்டமுனை பாலத்தினூடாக மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையம் வரை சென்று மீண்டும் அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்திக்க மாவட்ட செயலகத்திற்கு ஆர்ப்பாட்டகாரர்கள் சென்றிருந்தார்கள்.பொலிஸ் நிலையம் சென்றடைந்த ஆசிரியர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தார்கள். பொலிசார் எரிபொருள் வழங்குவதற்கு பொறுப்பில்லை எனத்தெரிவித்தார்கள். மீண்டும் பரீட்சை மதிப்பீட்டு ஆசிரியர்கள் மனவேதனையுடன் பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களுக்கு சென்றடைந்தார்கள்.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்னுரிமையளிப்பதற்கான
பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் பரீட்சை மதிப்பீட்டடாளர்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தை எந்தவொரு எரிபொருள் நிலைய பொறுப்பாளர்களும், பணியில் ஈடுபட்டுள்ள பொலிசாரும் முன்னுரிமை வழங்கவில்லை என பரீட்சை மதிப்பீட்டு ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.