எதிர்வரும் மாதத்தில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் 150 மில்லியன் டொலர்களை கூட வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்காக நாட்டிற்கு சுமார் 550 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார். அதில் 450 மில்லியன் டொலர் பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கும், 35 மில்லியன் டொலர் எரிவாயுவுக்கும், 30 மில்லியன் டொலர் நிலக்கரிக்கும் செலவிடப்படும். எரிபொருளுக்காக செலவிடப்படும் 450 மில்லியன் டொலர்களில், 150 மில்லியன் டொலர்கள் மாதாந்திர மின்சாரத் தேவைக்காக ஜெனரேட்டர்களை இயக்க செலவிடப்படுகிறது.
எண்ணெய் நெருக்கடி இல்லாத நாட்களில் நாளாந்தம் 5,500 முதல் 6,000 மெற்றிக் டொன் டீசல் சந்தைக்கு விடப்படுகின்ற போதிலும், இந்த நாட்களில் நாளாந்தம் 3,500 முதல் 3,000 மெற்றிக் டொன் டீசல் மாத்திரமே வெளியிடப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சமிந்த சமரகோன் தெரிவித்துள்ளார். .
மேலும், சாதாரண நாளில் 3,500 முதல் 3,700 மெட்ரிக் டொன் பெட்ரோல் வெளியிடப்படும் நிலையில், இதுவரை 3,000 மெட்ரிக் டொன்னாக மட்டுமே பெட்ரோல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் அதிகபட்ச கொள்ளளவிற்கு எரிபொருள் வெளியிடப்பட்டதாகவும், மே மாதம் முதல் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளதால், எரிபொருளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அடுத்த 20 நாட்களுக்கு போதுமான எரிபொருளை விநியோகிப்பது சவாலாக இருக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே ஆகஸ்ட் 01ம் திகதிக்கு பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
இலங்கைக்கான எரிபொருள் கொள்வனவு ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து நிச்சயமற்ற நிலையில் இருக்கும் எனவும், ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை பணம் செலுத்திய கப்பல்களில் இருந்து எரிபொருளை சேகரிக்க முடியும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டின் கையிருப்பு மிகக் குறைந்த அளவில் இருப்பதால், இந்தியா அல்லது சீனாவிடம் இருந்து கடன் உதவி வழங்குவதன் மூலம் எரிபொருள் இறக்குமதி செய்ய 550 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிக்க ஒரே வழி என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு அந்த நாடுகளின் ஆதரவு கிடைக்குமா என்பது நிச்சயமற்றது என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.