பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும்போது உள்வாரி பட்டதாரிகளுக்கு வேலைகளை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனினும், வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டப்படவில்லையெனக் குறிப்பிட்ட அவர், வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே பட்டத்தைப் பெறுவதுடன், அதன் பின்னர் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர். வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது அது குறித்து திருப்தியடைவதில்லையென்றும் அவர் கூறினார்.
பிரதமர் கேள்வி நேரத்தில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜ
கருணா மற்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கும் வகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
பட்டம் பெற்ற ஆண்டை அடிப்படையாகக் கொண்டே நாம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதையே அரசாங்கம் முன்னிலை வழங்கி நடவடிக்கையெடுத்து வருகின்றது. 2018 மே 25ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து முதற்கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதத்தில் 5000 பேரை பயிற்சியில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்களில் 3200 பேர் வரையில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக வந்தனர். எவ்வாறாயினும் அதன்பின்னர் ஒக்டோபர் மாதத்தில் எமது வேலைவாய்ப்புகள் இல்லாது போயிருந்தன. பின்னர் எம்மமால் அதனை பெற்றுக்கொண்ட பின்னர் 16,000 பேருக்கு நியமன கடிதங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்கள் வெளியேறிய வருடங்களை அடிப்படையாக கொண்டே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
2016 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்களை பெற்றவர்களுக்கு நியமனங்களை வழங்கினோம். தற்போது வரையில் வேலையில்லா பட்டதாரிகளில் 20,000 பேர் வரையிலானவர்கள் நாங்கள் நியமனங்களை வழங்கியுள்ளோம். முதற்கட்டமாக வெளிவாரி பட்டதாரிகளில் 6000 பேருக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் முதலாவதாக அரச பல்கலைகழக பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கப்படும். வெளிவாரி பட்டதாரிகளில் சிலர் வேறு வேலைகளை செய்துகொண்டே வெளிவாரி பட்டதாரிகளாகின்றனர். இதன்பின்னர் இங்கு வேலை வாய்ப்புகளை எதிர்ப்பர்ப்பர்.
அந்த வேலைகள் கிடைக்கும் போது அதில் திருப்தியடைவதில்லை. இதனால் உள்ளக பட்டதாரிகளுக்கு வழங்கிய பின்னர் வெளிவாரி பட்டதாரிகளுக்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்படும். என தெரிவித்தார்.
அதேநேரம், அரசாங்க நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கள் வழங்குவதைப்போன்று தனியார் துறையிலும் வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். (Thinakaran)