அன்று முதல் எமது நாட்டில் பிள்ளைகளின் ஒழுக்கமானது பாடசாலைகளினால் பேணப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் இன்று மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி ஆசிரியர்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதனால் சிறந்தவொரு எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புதல் தற்போது சவால்மிக்கதாக காணப்படுகிறது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
தற்செயலாக இடம்பெறும் சில தவறுகளுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவது தொடர்பில் சமூகத்தினுள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் சிறந்ததோர் ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு ஆசிரியர்களால் ஆற்றப்படும் பணிகள் அளப்பரியனவாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாத்தறை, கொகாவல மத்திய மகா வித்தியாலத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (11) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, மாணவர்களுக்கு வீடுகளைப் போன்றே பாடசாலைகளிலும் சிறந்த வழிகாட்டலும் பாசமும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டியதுடன், அவ்வாறு இல்லாத சந்தர்ப்பங்களில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரிக்கின்றது என்றும் தெரிவித்தார்.
கொகாவல மத்திய மகா வித்தியாலயத்திற்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
“அருகிலுள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை” தேசிய செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி வள நிலைய கட்டிடத்தை ஜனாதிபதி நேற்று மாணவர்களிடம் கையளித்தார்.
கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன் ஆரம்பக் கல்வி வள நிலையத்தில் மாணவர்களின் செயற்பாடுகளையும் அவதானித்தார்.
பாடசாலையின் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ஆசிரியையும் ஜனாதிபதியின் ஆரம்பகால ஆசிரியர்களுமான சிறிசேன விஜேசிறிவர்தன மற்றும் குசுமா விஜேசிறிவர்த்ன ஆகியோரின் புகைப்படங்களுக்கும் ஜனாதிபதி இதன்போது மலரஞ்சலி செலுத்தினார்.
இந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள விளையாட்டரங்கிற்கும் ஜனாதிபதி அடிக்கல் நாட்டியதுடன், அதன் நிர்மாணப் பணிகளுக்கும் நிதி அன்பளிப்பு வழங்கினார்.
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இரு பிரிவுகளுக்குமான சங்க நாயக்கர் புஹுல்வெல்ல, கிரிந்த பூர்வாராம பிரிவெனாவின் விகாராதிபதி சங்கைக்குரிய அபரெக்கே ஹிமரத்ன தேரர், தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், தென் மாகாண கல்வியமைச்சர் சந்திம ராசபுத்திர, தென் மாகாண அமைச்சர் மனோஜ் சிறிசேன, விசேட வைத்திய நிபுணர் பந்துல விஜேசிறிவர்தன ஆகியோரும் பாடசாலையின் அதிபர் ஆர்.எம்.ஆர்.பண்டார உள்ளிட்ட ஆசிரியர் குழாமினரும் பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (thinakaran)