சகல பரீட்சார்த்திகளுக்கும்,
பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்னர் இவ் அறிவுறுத்தல்களை வாசித்து அதன்படி செயற்படுமாறு தயவுடன் அறியத் தருகிறேன்.
பரீட்சைக்கான அறிவுறுத்தல்கள் :
- அனுமதி அட்டையில் கையொப்பத்தை உறுதிப்படுத்தல்
நீங்கள் சேவையாற்றும் நிறுவனத் தலைவரினால் அல்லது நிறுவனத் தலைவரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்டு பதவி முத்திரை இடப்படல் வேண்டும். சமாதான நீதவான் அல்லது ஏனையவர்களின் உறுதிப்படுத்தலானது செல்லுபடியற்றதாகும்.
- பரீட்சைக்குத் தோற்றும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் மூலப்பிரதி (பிரதி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.)
மட்டம் I – ரூ. 1000/-
மட்டம் II – ரூ. 700/-
மட்டம் III – ரூ. 500/-
மட்டம் IV – ரூ. 300/-
- பணம் செலுத்திய பற்றுச்சீட்டு தொலைந்து போய் இருப்பின், பரீட்சை நடைபெறும் தினமன்று திணைக்களத்தில் பரீட்சைக் கட்டணத்தை செலுத்துவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- நீங்கள் இப் பரீட்சைக்கு விண்ணப்பித்தது க.பொ.த. (சா/த) முதலாம் மொழி அல்லது க.பொ.த. (சா/த) இரண்டாம் மொழியில் சித்தியடைந்த பெறுபேற்றின் அடிப்படையில் ஆயின், அப் பெறுபேற்றுச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று அல்லது நீங்கள் இப் பரீட்சைக்கு விண்ணப்பித்தது அரசகரும மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைந்த பெறுபேற்றின் அடிப்படையில் ஆயின், அப்பெறுபேற்றுச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று, இப்பிரதி தங்களது நிறுவனத் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
- ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை/ செல்லுபடியான கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும். (அலுவலக அடையாள அட்டை அல்லது ஏனைய அடையாள அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.)
- விடை எழுதுவதற்கு கட்டாயமாக நீல நிறப் பேனையைப் பயன்படுத்தல் வேண்டும்.
மேற்குறித்த ஆவணங்களில் ஒன்றை அத்தினத்தில் சமர்ப்பிப்பதற்கு முடியவில்லை ஆயின், தங்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. உரிய ஆவணங்களை பின்பு சமர்ப்பிக்கும் நோக்கத்தில் பரீட்சைக்குச் சமுகமளிப்பாராயின், அவருக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.
சுகாதாரப் பாதுகாப்பிற்கான அறிவுறுத்தல்கள் :
சகல பரீட்சார்த்திகளுக்கும்,
- முகக்கவசம் அணிதல் வேண்டும்.
- இத் திணைக்களத்தின் வளாகத்திற்கு பிரவேசிக்கும் போது கிருமிகளை அழிக்கும் திரவம் அல்லது சவர்க்காரம் இட்டு கைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.
- பரீட்சார்த்திகள் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல் வேண்டும்.
- அலுவலகத்தில் இட வசதியின்மை காரணமாக பரீட்சார்த்தியுடன் வேறு நபர்கள் வருவதை மட்டுப்படுத்துமாறு தயவுடன் அறியத் தருகிறேன். சுகாதார பாதுகாப்பு கருதி, பரீட்சார்த்தி மாத்திரம் இத் திணைக்களத்தின் வளாகத்தினுள் பிரவேசித்தல் வேண்டும்.
- சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் குறித்த பரீட்சை நடாத்தப்படுவதனால், தங்களது ஒத்துழைப்பை நல்குதல் வேண்டும்.
- அரச நிறுவனத்திற்கு பொருத்தமான உடையில் வருகை தரவும். (சேலை அணிதல் கட்டாயமானதன்று)
ஏனைய அறிவித்தல்கள்
- பரீட்சார்த்தி ஒருவருக்கு அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படுவதால் அவர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளார் எனக் கருத முடியாது.
- தற்போது அமுலிலுள்ள அரசாங்க சுற்றறிக்கை 18/2020 இன் 8.1 இற்கமைய அரசகரும மொழித்தேர்ச்சியைப் பெற்றுக்கொள்வதற்காகப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தங்களுக்கு கிடைக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இச் சந்தர்ப்பத்திற்கு பதிலாக வேறு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட மாட்டாது. அத்தோடு அது குறித்து முன்வைக்கப்படும் கோரிக்கைகள் எந்தவொரு அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.
- தங்களுக்கு கிடைக்கப்பெறும் பரீட்சை அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி மற்றும் நேரம் மாற்றஞ் செய்யப்பட மாட்டாது.
- தங்களுக்கு கிடைக்கப்பெறும் அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ள தங்களது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மட்டம், மொழிமூலம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என பரிசீலித்து, அவ்வாறின்றேல் மாத்திரம் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை சரியாகக் குறிப்பிட்டு கிடைக்கப் பெற்றுள்ள அனுமதி அட்டையின் இலக்கத்தையும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் குறிப்பிட்டு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்பதாக அனுப்பி வைத்தல் வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி – [email protected]
- 15,000 விண்ணப்பங்கள் இப் பரீட்சைக்காக கிடைக்கப்பெற்றுள்ளமையினால் அனுமதி அட்டைகள் கட்டம் கட்டமாகவே அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரிகள் அனைவருக்கும் பரீட்சை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதோடு, அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அந்தந்த தினங்களுக்கான பட்டியல் இவ் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
- அனுமதி அட்டை கிடைப்பதில் ஏதேனும் தாமதங்கள் ஏற்படின், இணையத்தளத்தில் காட்டப்பட்டுள்ள தினத்தில், குறித்த நேரத்திற்கு இங்கு தரப்பட்டுள்ள அனுமதி அட்டையைப் பூர்த்தி செய்து கையொப்பத்தை உறுதிப்படுத்தி பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
- தாங்கள் இப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்பட்டதனை இணையத்தளத்தில் வெளியிடப்படாமல் இருப்பின், அது குறித்த விசாரணைகளை 2022 யூன் மாதத்தின் முதல் வாரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளும்படி அறியத் தருகிறேன்.