ஆசிரிய உதவியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

ஆசிரிய உதவியாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

ஆசிரியர் பயிற்சியினை முடித்த ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வுக்கான முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமை குறித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்டு, வர் த்தமானியின் பிரகாரம் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு உள்வாங்கப்பட்டு ஆசிரியர் பயிற்சி நெறியை நிறைவு செய்து இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிய ஆசிரியர்களின் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமைக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது.

கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் குறிப்பாக பெருந்தோட்டத்துறையில் பணிபுரியும் இந்த ஆசிரிய உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவையில் ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு இப்பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இதுபற்றி எமது சங்கம் முன்னரும் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும், பரீட்சை திணைக்களம் இதுவரை காலமும் தமது பொறுப்புக்களை தட்டிக் கழித்து வந்ததன் மூலம் இவ் ஆசிரிய உதவியாளர்கள் மேலும் ஒடுக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, கல்விமாணி பட்டப் படிப்புகளைப்(B.Ed) கற்கும் வாய்ப்பினையும் இழந்துள்ளனர்.

மேலும், அவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-11 க்கு உள்வாங்கி, உரிய சம்பளத்தினை நிர்ணயித்து பயிற்சிக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தோம், ஆனால் மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த ஆசிரிய உதவியாளர்கள் உதவித்தொகையாக கிடைத்த ரூ. 10,000 மட்டுமே பெற்றுக்கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்து தமது பயிற்சியை முடித்து இறுதிப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவ்வாறான நிலையில் இன்று நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் மிகவும் சிரமமான சூழ்நிலையிலும் பணிபுரியும் இந்த ஆசிரியர்களின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டு இலங்கை ஆசிரிய சேவையின் 3-1 தரத்திற்கு உள்ளீர்க்கப்பட வேண்டும். பெறுபேறுகளின் அடிப்படையில் உரிய சம்பள விகிதத்தில் நியமனங்கள் இடம் பெற வேண்டும், இல்லையெனில் அநீதி இழைக்கப்பட்ட இந்த ஆசிரியர்களுக்காக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடுமையாக வலியுறுத்துகின்றது எனக் குறிப்பிட்டு இக்கடிதத்தின் பிரதிகள் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் போன்றோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!