சம்பளமற்ற விடுமுறையில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் தமது விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.பீ.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் வெளிநாடு செல்லுவதற்கான சுற்றுநிருபம் 14/2022 வெளியான பின்னணியில் அது தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.
இதன்போது, வெளிநாடு செல்வதற்கான நிபந்தனைகள் தொடர்பாகவும் அவர் குறிப்பட்டார்.
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் குறிப்பிட்ட காலத்தில் வதியாதோர் வெளிநாட்டுக் கணக்குத் திறந்து அதனூடாக நாட்டுக்கு மாதாந்தம் பணம் அணுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிறைவேற்றுத் தரம் அல்லாத சேவையில் புதிதாக இணைந்துள்ள அதிகாரிகளுக்கும் தமது தகுதிகாண் காலத்திலும் வெளிநாடு செல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்ட அதிகாரி வெளிநாடு சென்று வந்த பின் குறிப்பிட்ட காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் ஒரு நிறுவனத்தில் இருந்து எத்தனை பேரை வெளிநாடு அனுப்ப அனுமதிப்பது என்பது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனம் நியமிக்கும் குழு தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தனர்.