கல்வியியற் கல்லூரி, ஆசிரிய பயிற்சிக் கலாசாலை
நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ளது.
அறிவித்தல் வருமாறு:
தற்போதைய நாட்டுச் சூழ்நிலையில் எல்லோரையுமே எமாற்றும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலைமை கல்வித் துறையிலும் நுழைந்துள்ளமை வேதனையான விடயம். அதிலும் கல்விக்குப் பேர்போன யாழ்ப்பாணத்தில் காசுக்காக பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது.
குறிப்பாக இந்தப் பட்டங்களைப் பெற அதிபர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது ஒட்டுமொத்த கல்விக்கும் சாவுமணி.
இதில் விசேடமாக கல்வியியற் கல்லூரி நிறைவுசெய்த ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நிறைவுசெய்த ஆசிரியர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றிதழ், பட்ட மேற்படிப்புச் சான்றிதழ்கள் ஏன் கலாநிதி சான்றிதழ்கள்கூட போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வியியலாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சிபெற்ற பல அதிபர், ஆசிரியர்கள், அதிகாரிகள் அத்தகைய போலியான சான்றிதழ்களை தமது தொழில் மற்றும் கல்வித் தகைமைகளுக்காக திணைக்களங்களில் ஒப்படைத்துள்ளார்கள் என அறியமுடிகின்றது.
தயவு செய்து அவற்றை உடனடியாக மீளப்பெற்றுக் கொள்வதோடு இனிவரும் காலங்களில் பணத்தைக் கொடுத்து ஏமாறாமல், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களுக்கூடாக வழங்கப்படும் பட்டங்களுக்காக முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டால் உங்கள் தொழிலுக்கும் ஆபத்தாகும்.