ஆசிரியர்களது நவீன வகிபங்குப் பரிமாணமாக உளவளத்துணையாளர் 


Teachmore

கலாநிதி பா.தனபாலன்

உப பிடாதிபதி

யாழ்ப்பாண கல்வியியல் கல்லூரி

யாழ்ப்பானம்

அறிமுகம்
சம கால மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வடிகால் அமைத்துக்கொடுக்கும் மிக முக்கிய நிறுவனமாக இன்று பாடசாலை உள்ளது. பாடசாலையின் உயிர்த்துடிப்பாளர்கள் ஆசிரியர்களே ஆவர். சமூகத்திற்கும் இவர்கள் வகைகூற வேண்டியவர்களாகவுள்ளனர்.
“ஆசிரியர்கள் தான் உலகின் முதன்மை அங்கத்தவர்கள் ஏனெனில் அவர்கள் பணி பூமியின் விதியைத் தீர்மானிக்கும்”   -ஹலன் கல்டிகொற்-
இவ்வாறு உலகிலேயே உயர்வாண்மையாக உள்ள ஆசிரியத் தொழில் வகிபாகங்கள் பல வாகவுள்ளன. கற்பிப்பவர், வழிகாட்டி, நண்பர், தலைவர், உதவுபவர், முன்மாதிரியாளர், சமூகத் தலைவர், கலைஞர் என இன்னும் பலவாகவுள்ளன. இவற்றுடன் இன்று உளவளத்துணையாளர் என்ற மிக முக்கிய பாத்திரத்தை உடனடியாகப் பெறவேண்டிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளார்கள். ஆசிரியர்கள் அனைவருமேஉளவளத் துணையாளர் வகிபாகத்தை ஏற்று இன்றைய மாணவர்களுக்கும்,  பெற்றோர்களுக்கும் பொருத்தமான ஆலோசனைகளைப் பொறுப்புடன் வழங்க வேண்டியுள்ளது.யுத்த விளைவுகள், வறுமை, சமூகச் சீர்கேடுகள், சமூக வன்முறைகள், கலாச்சாரச் சீர்கேடுகள், குடும்பப் பிரச்சினைகள், சமவயதுக் குழுப் பிரச்சினைகள், கட்டிளமைப்பருவ – பாலியல் சார் குழப்பங்கள் எனப் பல விதமான நெருக்கீடுகளால் பாதிக்கப்பட்டு உளச்சக்தி தீய்ந்து போயிருக்கின்ற மாணவர்களைத் தயார்நிலைக்கு அழைத்துவர வேண்டிய பொறுப்பு இன்று ஆசிரியர்கள் மீது அவர்களை அறியாமலே சுமத்தப்பட்டுள்ளது. அதைப்புரிந்து தமது கற்பித்தல் கடமைகளுடன் உளவளத் துணையாளராக இருந்து வழிகாட்டப் பல்வேறு திறன்களை இன்றைய ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.
உளவளத்துணை
ஒருவர் தனது உளவளங்களின் முழுமையான விருத்தியை நோக்கிச் செல்கின்ற பயணத்தில் அவர் தான் சந்திக்கின்ற தடைகளை வெற்றிகொள்ள அவருக்கு அளிக்கும் ஒரு உயிர்ப்பான தொடர் செயற்பாட்டு உதவியே உளவளத்துணையாகும். இன்றைய பாடசாலை மாணவர்கள் பல நெருக்கடிகள் மத்தியில் தமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது தவிக்கின்றார்கள், தற்கொலை செய்து கொள்கின்றார்கள், தகாத உறவுகளை மேற்கொள்கின்றார்கள், போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றார்கள். ஆசிரியரையோ, அதிபரையோ, பெற்றோரையோ, பெரியோரையோ மதிக்காமல் செயலாற்றுகின்றார்கள் எனக்குற்றம் சுமத்தப்படுகிறது. இதற்கு மேற்குறிப்பிட்டவர்களே முன்மாதிரியாகவுமுள்ளார்கள். இவற்றிலிருந்து மாணவர்களை மீட்க இன்று ஒவ்வொரு ஆசிரியரும் உளவளத்துணையாளர் வகிபங்கைப் பிரயோகிக்க வேண்டும். 
உளவளத் துணையில் உறவு அல்லது தொடர்பு என்பது முக்கியமானது. பிரச்சினைகளோடு வரும் மாணவரை “அவரை அவராக ஏற்று மதித்து கசப்பான அனுபவங்களைப் பகிர” ஒத்துணர்வு ஆசிரியருக்குத் தேவை. மாணவரின் ஏக்கங்கள், தேவைகள், ஆசைகள் என்பவற்றை அறிந்து – உணர்ந்து, அவரது பிரச்சினையின் உண்மை நிலையை அவரையே அறியச்செய்து அவரையே தீர்வுக்கான உதவும் சேவையாக உளவளத்துணைச் சேவை அமைகின்றது. 
உதவி நாடி வரும் மாணவர்களின் உளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு உளவளத்துணைச் சேவை நின்று விடுவதில்லை. அதற்கு அப்பால் தேவை ஏற்படுகின்றபோது மாணவரின் நடத்தையில் நேரான மாற்றத்தை ஏற்படுத்தல் புதியதான – நேரான அகக்காட்சிகளைக் காணச்செய்தல்,குடும்பம், பாடசாலை சமூகப் புறச்சூழல் மாணவரில் பாதகமான முறையில் தொழிற்படுகின்றபோது அவற்றினைச் சாதகமான முறையில் மாற்றியமைத்தல், குடும்பமாக வைத்து குடும்ப உளவளத் துணையை வழங்குதல், ஒத்த பிரச்சினையுள்ள துணைநாடி மாணவர்களைச் சேர்த்து குழுவாக உளவளத் துணைச் சேவை செய்தல் என்பவையும் முன்னுரிமை பெறுகின்றன. 
உளவளத்துணை ஆசிரிய வகிபங்குப் பண்புகள்
ஆசிரியர்கள் உளவளத்துணையாளராக செயலாற்ற முன்வரும்போது அவற்றிற்கான உரிய பயில்வுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் “ஆசிரியர்கள் வாண்மைசாரா உளவளத்துணையாளர்”என்ற வகையில் மாணவர்களை அன்புடன் அணுகி பாதுகாப்பை வழங்கி, அவர்கள் எவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து வருகின்றார்கள் எத்தகைய உளப்பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவற்றிற்குரிய காரணங்கள் எவை? அவற்றை இனம் காண்பது எவ்வாறு? தீர்வுகளை எவ்வாறு பெறலாம்? எவ்வாறான உதவிகளை வழங்கலாம் ஆகிய விடயங்களுக்குத் தீர்வுகளைப் பெற பின்வரும் வகிபங்குகளை ஆசிரியர்கள் பெற வேண்டும்.

 • சிறந்த செவிமடுப்பாளர் (As a Active Listener)
 • நண்பர் (as a Friend)
 • வசதியளிப்பவர் (as a Facilitator)
 • வழிகாட்டுபவர் (as a mediator)
 • சிகிச்சையளிப்பவர் (as a Premeditator)
 • தலைமைத்துவம் வழங்குபவர் (as a Leader)
 • தகவல் வழங்குபவர் (as a Information Provider)
 • பிரதி நிதி (as a Representative or Agent)
 • கட்டுப்பாட்டாளர் (As a Controller)
 • முற்பாதுகாப்புடன் செயற்படுபவர் (As a preventer)
 • சமூகநிர்மானி (Social Builder)


இவ்வாறு பரந்த ஆசிரியத்துவத்துக்கே உரித்தான வகிபங்குகளை உளவளத் துணையாசிரியர் கொண்டிருப்பதுடன் இரகசியம் காப்பவராக, நேர்மையானவராக, மனிதத்துவம் பொதிந்த முதல்தர நல்மனிதராக, நம்பிக்கைக்குரியவராகச் செயலாற்ற வேண்டும். எனவே உளவளத்துணை என்பது தகவல் கொடுப்பதல்ல, புத்திமதி கூறுவதல்ல, துணைநாடிவருபவரை மதிப்பீடு செய்வதல்ல, நம்பிக்கைகளை மாற்றுவதல்ல, எச்சரிக்கை – பயமுறுத்தல் விடுவதல்ல, தன் உளச்சக்தி மூலம் துணைநாடியினுடைய உளச்சக்தியைப் பொருத்தமாக அசைப்பதன் மூலம் துணைநாடி தனது சக்திகளை இனம் கண்டு அவற்றைப் பயன்படுத்தி தன் பிரச்சினைகளைத் தீர்க்க துணை புரிதலே உளவளத்துணை ஆசிரியரின் முக்கிய பணியாகும்.
நாடிவரும் மாணவர்களின் உளச்சக்தி அசையச் செய்வதற்கு

 • உடனிருத்தல்
 • உற்றுக்கேட்டல்
 • ஒத்துணர்வு
 • துருவி ஆராய்தல்
 • குவியப்படுத்தல்
 • எதிர் கொள்ளல்
 • பார்வை மாற்றம் செய்தல்
 • இலக்கு நிர்ணயம் செய்தல்

ஆகிய நுண் திறன்களை மேற்கொள்ள வேண்டும். பிரயோக ரீதியில் இத்திறன்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒழுங்கு முறையில் வர வேண்டும் என்பதல்ல. உளவளத்துணையாசிரியர் உன்னத ஆளுமைப் பண்புடையவர்களாகக் காணப்பட வேண்டும். 
உன்னத ஆளுமைப் பண்புகள்ஒருவரது ஆற்றல்கள், நம்பிக்கைகள், தனித்தன்மைகள் மனப்பாங்குகள், சமூக ஒற்றுமைத் தன்மைகள், கொள்கைகள், பழக்கவழக்கங்கள், உணர்ச்சித்தூண்டல் பேறுகள், மனப்பாங்குகள் ஆகியவற்றுடன் அவற்றிடம் காணப்படும் சக்தி மட்டங்கள், எண்ணங்கள், கனவுகள் ஆகிய அனைத்தையும் அவரது ஆளுமை உள்ளடக்கியிருக்கும். எல்லாமனிதர்களுமே தமக்கெனப் பிரத்தியேகமாக ஆளுமைக் கூறுகளைக் கொண்டிருக்கின்றார்கள்.
எனினும் தமது ஆற்றல்களை முழுமையாகத் தொழிற்படுத்துகின்ற நிலையில் மனிதர்கள் இருப்பது குறைவு, ஆனால் உன்னத ஆளுமையுடையோர் நேர் நிலையில் முழுமையாகத் தொழிற்படுகின்ற ஆளுமை உள்ள மனிதர்களாக இருப்பர். 
இவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே தீர்ப்பிடுவர். அல்லது தீர்ப்பிடாமலே விடயங்களை நோக்குவர். இவர்கள் விடயங்களில் இருந்து மனிதர்களைப் பிரித்துப்பார்க்கக் கூடியவர்களாகவே இருப்பர். தம்மிலுள்ள குறை நிறைகளை முழுமையாக விளங்கிக் கொள்வதுடன் அவற்றை ஒரே தளத்தில் நின்று மனந்திறந்து பேசக்கூடியவர்களாக இருப்பர். தமது சுயத்தில் நின்று மனந்திறந்து பேசக்கூடியவர்களாக இருப்பர். தமது சுயத்தின் இருண்ட பக்கங்களை அல்லது தமது ஆலோசனை நாடியின் இருண்ட பக்கங்களைப் பார்க்கக் கூடிய ஆற்றல் உடையவர்களாக இருப்பர். உன்னத ஆளுமையாளர்களின் ஆளுமைக்கூறுகள் முரண்பாடோ அல்லது பிளவோ இருப்பதில்லை. இவர்கள் தமது மறை எண்ணங்களை மற்றவர்கள் மீது புறத்தோற்றம் செய்யமாட்டார்கள். அவர்களிடமிருந்து எப்போதும் நேரான எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகளே வெளிப்படும். இதனால் உன்னத ஆளுமையாளர்களுக்கு அருகிலிருப்பவர்களும் மேலான ஒரு உணர்வை அனுபவிப்பார்கள். 
இவர்கள் மனிதத்துவத்தை நிறைவாக அனுபவிப்பார்கள். உலகம் முழுவதும் பரந்து காணப்படும் அன்பை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். இவர்கள் மகிழ்வு இன்பம் ஆகியவற்றுடன் மட்டும் தம் வாழ்வைச் சுருக்கிக் கொள்ளாது தம் எதிரான உணர்வுகளையும் புரிந்து செயற்படுவர். ஏனையவர்களின் எதிர்மறையான செயற்பாடுகள் இவர்களை ஒரு போதும் பாதிக்காது. இவ் உன்னத ஆளுமையுடையோர் சரி- பிழை, நல்லது – கெட்டது எனத் தீர்பிடுவதில் காலத்தைச் செலவு செய்யாது ஆக்க ரீதியாக என்ன செய்யலாம் என்பதிலேயே கவனம் செலுத்துவர். தமது குறைகளைத் தொடர்ந்துதிருத்திக் கொண்டே இருப்பர். இது ஏனையவர்களின் குறைகளைத் தீர்க்க முன்னுதாரணமாக அமையும்.
தமது செயல்களுக்குத் தாமே பெறுப்பேற்றுக்கொள்வர். தமது உள்ளத்தோடும் உடலோடும் உயிர்ப்பான தொடர்பு கொண்டிருப்பதால் தங்களைப் பற்றி யதார்த்தமான இலட்சியவாத விம்பங்களை வைத்திருப்பதில்லை.
உன்னத ஆளுமைப் பண்புடையவர்களின் பண்புகளில் பாரம்பரீயக் கூறுகளும் தாக்கம் செலுத்த முடியாது. மற்றவர்களைக் குறை கூறுவதைஇவர்கள் தவிர்த்துக் கொள்வர். தமக்கு ஏற்படுகின்ற துன்பங்களையும், கஸ்டங்களையும் கூட எப்படிப் பயனுள்ளதாக மாற்றலாம் என்பதில் ஆர்வம் காட்டுவர். மற்றவர்களால் ஏற்படுத்தப்படுகின்ற புண்படுத்தல், உதாசீனம் செய்தல், பயன்படுத்தல் போன்ற வலைகளில் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
மேலும் இவர்கள் இன்னொருவர் போல் ஆகவேண்டும் என்ற விருப்பமின்றி தாம் தாமாகவே இருக்க விரும்புவர். இவர்கள் மற்றவர்களின் வளர்ச்சியிலும் சமூகத்தின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். இவ்வாறான பண்புகள் அனைத்தும் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கிடைக்கும்போது அவர்கள் உளவளத்துணையாளர் என்ற உயர்ந்த வகிபங்கைப் பிரயோகிப்பவராகச்செயலாற்ற முடியும். இதற்கான பயிற்சிகளையும், எதிர்காலவியல் நோக்கிய திட்டங்களையும், செயலாற்றுகைகளையும் விரைவாக எமது மண்ணில் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதன் மூலமே கல்விப் பிரச்சினைகள் பலவற்றை நாம் தீர்த்துக் கொள்ள முடியும்.
“கல்விக் கூடங்களிலும் வாழ்க்கையிலும் ஆற்றப்படும் பணியின் உள்ளார்ந்த நோக்கம் அதன் வழி உளப்பூரிப்படைதலும் ஆனந்தம் அனுபவித்தலும் மட்டுமன்றி அப்பணியின் பேற்றால் சமூகம் அடையும்உன்னத நன்மைகள் பற்றிய அறிவு பெறுதலாகும்”- அல்பேட் ஐன்ஸ்ரைன்-
என்ற வகையில் எமது பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் இடர்பாடுகள் கருத்தூன்றி மனிதத்துவ நோக்கில் கவனிக்கப்பட வேண்டும். மாணவர்களின் உடல் – உளப்பிரச்சினைகள் கல்விச் செயற்பாடுகளில்தடைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்தும் அதே வேளை விரும்பத்தகாத செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி எதிர்கால வாழ்வு பாதிப்படைகின்றது. 
எனவே கல்வியை வழங்கும் உயர் சமூக நிறுவனமான பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கல்வியின் விளைவாக மாணவர்கள் உச்சப்பயனை மகிழ்ச்சியான சூழலில் பெற தம்மை அர்ப்பணிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் நவீன வகிபங்குப் பரிமாணமான உளவளத்துணையாளன் என்ற உன்னத வகிபங்குச் செயன்முறை வழிகாட்டி நிற்கின்றது.

(ஆயதனம் 2013)

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!