நாளை (04) ஆரம்பமாகும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள ஆரம்ப வகுப்பு பிள்ளைகளை அழைக்க அதிபர்களுக்கு அனுமதியில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தவணைப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதால் தரம் 6 தொடக்கம் 13 வரையான சிறார்கள் பாடசாலைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு காரணமாக சிறுவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதால் நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (02) கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எவ்வாறாயினும், மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தவணைப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை மாத்திரமே அழைக்க முடியும்.
இந்த வாரத்தில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டால் அதிபர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.